Book My Iyer

http://bookmyiyer.com/

Friday, June 17, 2016

99வது கிலோமீட்டரில் ..

இந்த பதிவு whats app மூலம் வந்த ஒரு forward மெசேஜ் என்னுடைய அனுபவம் இல்லை.


சென்னையில் இருந்து திருச்சி போகும் பிரதான சாலையில் சரியாக 99வது கிலோமீட்டரில் மேல்மருவத்துார் தாண்டி அரப்பேடு சந்திப்பில் இருக்கிறது 99 கிலோமீட்டர் காபி ஷாப். கடந்த வாரம் அந்த வழியாக போகும் போது அந்த காபி ஷாப் போயிருந்தேன். வாசலில் இருந்த ஒரு போர்டு வித்தியாசமாகப்பட்டது.அதில் பயணிகள் தாங்கள் கொண்டுவரும் உணவை ரோட்டில் ஆபத்தான முறையில் நின்று சாப்பிடாமல், எங்களது உணவகத்தில் எவ்வித கட்டணமுமின்றி உட்கார்ந்து நிம்மதியாக சாப்பிடலாம், இங்குள்ள பிற வசதிகளையும் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எழுதப்பட்டு இருந்தது.
வழக்கமாக வெளியில் இருந்து கொண்டுவரும் உணவுப்பொருள்களுக்கு இங்கு அனுமதி கிடையாது என்றுதான் எழுதிப்போட்டிருப்பர் ஆனால் இது வித்தியாசமாகவும் நல்லவிதமாகவும் இருக்கவே உணவகத்தின் உரிமையாளர் மனோகரனுக்கு பாராட்டு தெரிவித்தேன்.
இந்திய ராணுவத்தின் விமான பிரிவில் பணியாற்றிவிட்டு சொந்த ஊர் திரும்பியவர் நாலு பேருக்கு பயன்படும்படியான தொழில் துவங்கலாம் என்று யோசித்து இந்த உணவகத்தை துவங்கியுள்ளார்.
நான்கு வருடங்களுக்கு முன் இட்லியும் காபியும் மட்டும் விற்கும் உணவகமாக இருந்தது, இன்றைக்கு இந்த வழியாக செல்லும் இசை அமைப்பாளர் இளையராஜா முதல் இயக்குனர் மிஷ்கின் வரை சாப்பிட்டுவிட்டு செல்லும் அளவிற்கு உணவகம் வளர்ச்சியடைந்துள்ளது.
காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரை இயங்கும் இந்த உணவகத்தில் பாரம்பரிய உணவுகள் மட்டும் தயாரித்து விற்கப்படுகிறது. வெந்தயகளி, வாழைப்பூ வடை, குதிரைவாலி பொங்கல், வரகரிசி சாப்பாடு, தினை பாயசம், சிறுதானிய சப்பாத்தி என்று மெனு நீள்கிறது. அதுவும் நியாயமான விலையில். எல்லா பலகாரமும் கண் எதிரே சுடச்சுட தயாராகி வருகிறது. மண் கலயத்தில் வழங்கப்படும் பனங்கல்கண்டு மூலிகைப்பால் சுவையே தனி.
இங்கு பாரம்பரிய தானியங்கள் விற்பனையும் செய்யப்படுகிறது.ஒரு புத்தககடையும் இருக்கிறது. பழக்கடை மற்றும் பழங்கால பித்தளை செம்பு பொருட்கள் விற்பனையும் உண்டு. பிளாஸ்டிக் மட்டும் கிடையாது.
இருபதிற்கும் அதிகமாக கிராமத்து பெண்கள்தான் இங்கு வேலை செய்கின்றனர். இவர்களைப் போல இன்னும் பல கிராமத்து பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதற்காவே இந்த உணவகத்தை விரிவுபடுத்திக்கொண்டே போகிறேன்.
சென்னையை விட்டு வெளியே வரும்போதும், உள்ளே போகும் போதும் நல்ல சூழ்நிலையில் நமது பாரம்பரிய உணவை மக்கள் குடும்பத்தோடும் குதுாகலத்தோடும் சாப்பிட்டுவிட்டு செல்லவேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்று சொன்ன மனோகரன், உணவகத்தைவிட்டு கிளம்பும் குழந்தைகள் கையில் இரு சிறு மண் பாத்திரங்களை இலவசமாக கொடுக்கிறார்.
ஒன்றில் தண்ணிரும், ஒன்றில் சிறுதானிய உணவும் நிரப்பி உங்கள் வீட்டு மொட்டை மாடியில் வைத்துவிடுங்கள், வெயிலில் காலத்தில் பசியோடும் தாகத்தோடும் பறக்கும் பறவைகள் இதனை சாப்பிட்டு சந்தோஷப்படும் என்கிறார், குழந்தைகள் சந்தோஷமாக தலையாட்டி வாங்கிக்கொண்டனர்.


திரு.மனோகரன் போன் எண்: 9629781777


FaceBook link

https://www.facebook.com/pages/99Km-Filter-Coffee/627846600595093



2 comments:

  1. ஆஹா, படித்து மிகவும் ஆனந்தப்பட்டேன்.

    ReplyDelete